×

லாரி- கார் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி திருவண்ணாமலை அருகே கோர விபத்து பெங்களூருவில் இருந்து கோயிலுக்கு வந்தபோது பரிதாபம்

திருவண்ணாமலை, ஆக.14: திருவண்ணாமலை அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்கலா கே.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாத்ரெட்டி(54). அதே பகுதியில் கிரானைட் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி சந்திராம்பாள்(50). மகள் ஷாலினி(28), மகன் பரத்(24), மருமகன் சந்தீப்(34) ஆகியோருடன் ஒரே காரில் நேற்று பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள அய்யம்பாளையம் கிராமம் ஒட்டல்குடிசை பகுதி அருகே மதியம் 12 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி எதிரில் வந்த லாரி கார் மீது மோதியது.

இந்த விபத்தில், காரின் முன்பகுதி லாரிக்குள் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த நாத் ரெட்டி உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆர்டிஓ தேவி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். லாரியின் அடியில் கார் சிக்கியிருந்ததால், பலியானவர்களின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப்பணி நடந்தது. விபத்தில் பலியான 5 பேரின் உடல்களை சுமார் 45 நிமிடம் போராடி மீட்டனர். அதில், இருவரது உடல் முற்றிலுமாக சிதைந்திருந்தது. அதைத்தொடர்ந்து, 5 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரஜினி(37) என்பவர், லேசான காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடும்பத்துடன் திருக்கோவிலூருக்கு சென்று அங்கிருந்து திருநள்ளாறுக்கு செல்ல இருந்ததாக அவர்களுடைய உறவினர்கள் தரப்பில் போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் விபத்தில் இறந்த சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அய்யம்பாளையம் ஒட்டல்குடிசை பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, அந்த பகுதியில், விபத்து பகுதி எனும் எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...