×

ஆரணி சேவூர் கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடியில் ₹65 லட்சம் முறைகேடு தலைவர், முன்னாள் செயலாளரிடம் விசாரணை

ஆரணி, ஆக.14: ஆரணி சேவூர் கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடியில் ₹65 லட்சம் முறைகேடு விவகாரத்தில் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் முன்னாள் செயலாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சேவூர், அடையபுலம், முள்ளிப்பட்டு, இரும்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நகைக்கடன், விவசாய கடன், பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல் சுமார் ₹65 லட்சம் வரை கூட்டுறவு சங்க தலைவர் தவமணி மற்றும் முன்னாள் செயலாளர் நடராஜன், ஆகியோர் சேர்ந்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தன்மேல் பழி வராமல் இருக்க 2 மாதத்திற்கு முன்பு முன்னாள் செயலாளர் நடராஜன் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் கள அலுவலர் ரவிச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக ஆவணங்களை சரிபார்த்து விசாரித்து வருகிறார். இந்நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், அவர்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளனர். இதுபோன்று மொத்தம் ₹65 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற கிராமங்களில் தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்த சில விவசாயிகள், வங்கியில் வந்து கேட்டனர்.

ஆனால் விஷயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் செலுத்திய ₹20 லட்சத்தை மட்டும் திருப்பிக்கொடுத்துள்ளனர். இதையறிந்து மற்ற விவசாயிகளும் வங்கிக்கு வரத்தொடங்கியதால் அவர்களை திசைதிருப்ப, தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற போலி நோட்டீசுகளை விவசாயிகளுக்கு அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்க தலைவர் தவமணி, அப்போதைய செயலாளர் நாகராஜன் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...