×

மார்த்தாண்டத்தில் பரபரப்பு லேப்டாப் கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கருங்கல், ஜூலை 19: மார்த்தாண்டத்தில் லேப்டாப் கேட்டு  கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.மார்த்தாண்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் எல்.எம்.எஸ். மேல் நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு அரசு லேப்டாப் வழங்கவில்லை. இந்த மாணவர்கள் தற்போது மார்த்தாண்டம் கிறிஸ்தவக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை வகுப்பை புறக்கணித்து மார்த்தாண்டம் அரசு மேல்நிலை பள்ளி முன் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லேப்டாப் வேண்டுமானால் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதை விடுத்து அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என கூறினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலு வலகத்தில் புகார்:இந்த நிலையில் போராட்டம் நடத்திய மாணவர்கள்  நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளை சந்தித்து  மனுஅளித்தனர். அதில்  கூறியிருப்பதாவது:  2017-18, 2018-19ம் கல்வியாண்டில் இலவச லேப்டாப் திட்டத்தின்படி எங்களுக்கு இதுவரைக்கும் லேப்டாப் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது படித்துக்கொண்டிருக்கும் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் பயன்பெற உரிமை இல்லையா? நாங்கள் இன்று காலையில் குழித்துறையில் கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது கல்வித்துறை அலுவலக ஊழியர் எங்களிடம் உங்களுக்கு எந்த கோரிக்கை இருந்தாலும் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.  அதன் அடிப்படையில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டோம். எங்களுக்கு 10 நாட்களில் அரசிடம் இருந்து ஒரு தகவலும் வராவிட்டால் நாங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து காலரையற்ற போராட்டத்தை நடத்துவோம். பிறகு சரியான முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...