×

மதுபாட்டில் கீழே விழுந்து உடைந்த தகராறு மாணவனின் காதை கடித்து துப்பிய போதை ஆசாமிகள்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னை: மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (24). தொலைதூர கல்வி மூலம் பி.ஏ படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் பக்தவச்சலம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மதுபாட்டில் வாங்கி, கடையின் அருகிலேயே அமர்ந்து பாட்டிலை திறந்து பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றினார். அப்போது அதே டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய 3 வாலிபர்கள், அருகில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் போதையில் எதிர்பாராத விதமாக பிரமோத் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பிரமோத் வைத்திருந்த மதுபாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரமோத், தன் மீது விழுந்த நபரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். உடனே தாக்குதலுக்கு ஆளான நபருடன் வந்த 2 பேர் பிரமோத்தை சரமாரியாக தாக்கி கட்டிப்பிடித்து உருண்டனர். அப்போது 3 போதை ஆசாமிகளில் ஒருவர் பிரமோத் காதை கடித்து துண்டாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் பிரமோத் துடித்தார். இதை பார்த்த சக குடிமகன்கள், அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரமோத்தை உடனே மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீசார் வழக்கு பதிந்து, டாஸ்மாக் கடை அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 3 போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post மதுபாட்டில் கீழே விழுந்து உடைந்த தகராறு மாணவனின் காதை கடித்து துப்பிய போதை ஆசாமிகள்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pramod ,West Mambalam ,Dinakaran ,
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!