×

ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலையில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய்த்தொற்று அபாயம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் உள்ள பழத்தோட்டம் பகுதியில் குப்பை கழிவுகளை ஒரே இடத்தில் ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் மலைபோல் குவிந்த குப்பைகளால்  துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இது ஒரு சுற்றுலாத் தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் தூய்மை காவலர்கள் மூலம் வீடு வீடாக சென்றும், சாலையோரங்களில் உள்ள குப்பைகளை தூய்மை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒன்றிய நகர பகுதிகளில் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மூலம் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை எருவாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை வெளி மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதனால் ஒன்றிய நகர ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் இன்றி சாலைகள் தெருக்கள் தூய்மையாக காணப்படுகின்றன. இந்நிலையில் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள பழத் தோட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்குள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் விடுதிகளின் கழிவுகள், சாலையோரங்களில் உள்ள காய்கறி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை சேகரித்து அவற்றை டிராக்டர் மூலம் பழத் தோட்டத்தின் உள்ளே 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி அதில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து விடுதிகளின் கழிவுகள், கோழி கழிவுகள் உள்ளிட்டவைகளை ஒரே இடத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி காற்று மாசுபட்டு நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும், மேலும் மழைக்காலம் என்பதால் மழைநீரானது இங்குள்ள குப்பை கழிவுகளுடன் கலந்து சேரும் சகதிகளாக மாறி அருகாமையில் உள்ள விவசாய கிணற்று பகுதிகளுக்கும் நீரோடையாக சென்று ஜலகாம்பாறை செல்லும் நீர்வீழ்ச்சி பகுதிக்கும் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மங்கலம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கடந்த மாதம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள பழத் தோட்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை கழிவுகளை கொட்டி மலைபோல் குவித்து வருவதால் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வாழும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகம் ஒரே இடத்தில் கொட்டி வரும் குப்பை கழிவுகளை அகற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலையில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய்த்தொற்று அபாயம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Elagiri ,Jolarbett ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!