×

வெளிநாடுகளில் அமோக வரவேற்பு சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு கிடைக்குமா புவிசார் குறியீடு?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

சாயல்குடி : மருத்துவ குணம் வாய்ந்த சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருப்பதால் புவீசார் குறியீடு வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் அதிக பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனைமரத்தொழில் மற்றும் அது சார்ந்த உப தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சாயல்குடி அருகே நரிப்பையூரில் துவங்கி திருப்புல்லாணி, உச்சிப்புளி, ராமேஸ்வரம், தொண்டி வரையிலும் இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால், அடிக்கடி வறட்சி நிலவி வருவதால் சீசன் நிலை மாறி, பனைமரத்தொழில் நலிவடைந்து வந்தது. இதனால் ஹார்டுவேர்ஸ், சேம்பர் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்ததால், இந்தாண்டு பதநீர் உற்பத்தி சற்று அதிகரித்தது. இதனால் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மருத்துவ குணம் வாய்ந்த உணவுப்பொருள் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் டீ, காபியில் கலந்து குடிப்பதற்கும், பணியாரம், தோசை உள்ளிட்ட உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதற்காகவும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் பொருளாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பனங்கற்கண்டு, கருப்பட்டிக்கு அமோக வரவேற்பு உள்ளது. கருப்பட்டியில் சுக்கு, ஏலக்காய், மிளகு போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மருத்துவப் பொருட்களை சரியான அளவில் சேர்த்து கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கருப்பட்டி தயாரிப்பாளர் நரிப்பையூர் அந்தோணி கூறுகையில், ‘‘கடந்த தை மாதம் பதநீர் சீசன் துவங்கியது. தற்போது ஆடி, ஆவணி மாதம் மேற்கு தொடர்ச்சி மழை காற்று சீசன் என்பதால் கூடுதலான இனிப்புடன் பதநீர் கிடைக்கும். இந்த பதநீரை காய்ச்சி பதப்படுத்தி, மண்பானை மற்றும் தகர டிரம்மில் வைத்து 41 நாட்கள் மண்ணிற்குள் காற்று புகாத படி புதைத்து வைத்து விடுவோம்.பிறகு வெளியே எடுத்து அதனை பிரித்து சுத்தப்படுத்தி, தண்ணீர் கொண்டு கழுவி வெயிலில் உலர வைத்து, பனங்கற்கண்டு தயாரிக்கிறோம். டைமன்ட் கற்கண்டு, தூள் கற்கண்டு, பவுடர் கற்கண்டு என 3 வகையாக பிரித்து கிலோ ஒன்றிற்கு ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. கருப்பட்டி கிலோ ரூ.300, சுக்கு கருப்பட்டி ரூ.250க்கு விற்கிறோம். இதனை மதுரை, கீழக்கரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் வாங்கி சென்று அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். கொரோனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க பனங்கற்கண்டு தேவை அதிகரித்தது. இதனால் வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது’’ என்றார்.ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடு பதிவுகள் மற்றும் பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொருந்துகிறது. இதன் மூலம் வேறு யாரும் வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயரில் பயன்படுத்துவதை தடுக்கமுடியும். நம்ம ஊர் பொருட்களை எவ்வித தடையின்றி வெளிநாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் அன்னிய செலாவணியில் நமது சந்தையின் மதிப்பு பல்மடங்கு உயர்கிறது. எனவே, சாயல்குடி பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வெளிநாடுகளில் அமோக வரவேற்பு சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு கிடைக்குமா புவிசார் குறியீடு?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Amoka ,Sayalkudi ,Sayalkudi Saku Black ,Sayalkudi Sikhu Kapatti Geosekode ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...