×

இரட்டைமடி வலை பயன்படுத்திய 4 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்கு-மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய 4 விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தது கண்டறியப்பட்டு அவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தை சேர்ந்த 55 விசைப்படகுகளையும் மீன்வளத்துறை ஆய்வு செய்வதற்காக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களிடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சேதுபாவாசத்திரம் மீனவர்கள் அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக வரப்பெற்ற புகாரினை தொடர்ந்து. சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் விசைப் படகுகளை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சேதுபாவாசத்திரம் ஆனந்த், மல்லிப்பட்டினம் கங்கேஸ்வரி, மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரம், சுரேஷ், சப்.இன்ஸ்பெக்டர் நவநீதன், கடல் சட்ட அமலாக்க பிரிவு காவலர் ராஜா, கடலோர பாதுகாப்பு குழும காவலர் பழனிவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில் ராமன், பாலகிருஷ்ணன், காளிமுத்து, முருகன் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தது வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 விசைப்படகுகள் மீதும் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை இணை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய சேதுபாவசத்திரம் மீன்பிடிதுறைமுகத்தை சேர்ந்த 55 விசைப்படகுகளுக்கும் மீன்வளத்துறையின் அனுமதி டோக்கன் வழங்காமல் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தபின் அனுப்புவதற்காக சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கூறியது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 4 விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்படும். மேலும் வழக்கு முடியும் வரை அந்த விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க அனுமதியும், மான்ய டீசலும் வழங்கப்படாது என்றார்….

The post இரட்டைமடி வலை பயன்படுத்திய 4 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்கு-மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Setupavasatram ,Dinakaran ,
× RELATED பேராவூரணி பேரூராட்சியில்