×

நெற்பயிரில் காணும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குநர் விளக்கம்

பட்டுக்கோட்டை : நெற்பயிரில் காணும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:மதுக்கூர் வட்டாரத்தில் 1,183 ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்களில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையை தொடர்ந்துபல்வேறு விதமான பூச்சிகள் நெல் பயிரில் காணப்பட்டாலும், கதிர் விடும் தருணத்தில் உள்ள நெல் பயிரில் தற்போது குருத்துப் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இந்த குருத்து பூச்சியானது மஞ்சள் வண்ண அந்துப்பூச்சி ஆகும். இரவு நேரங்களில் நமது விளக்கு வெளிச்சத்தில் வீட்டில் இது அதிகமாக தெரிந்தால் மஞ்சள் வண்ண குருத்துப் பூச்சியின் தாக்குதல் உள்ளதை நாம் அறியலாம். குருத்துப்பூச்சி ஆனது நெல் பயிரின் நுனியில் இலைகளின் அடிப்பகுதியில் 15 முதல் 80 முட்டைகள் கொண்ட குவியலாக இடும்.ஒரு தாய் அந்துப்பூச்சி 3 குவியல் வரை முட்டை இடும் முட்டையிலிருந்து புழுவாக மாறுவதற்கு ஒரு வார காலம் எடுத்துக் கொள்கிறது. இது குருத்து பகுதி முழுவதையும் தொடர்ந்து உண்ணுவதால் பயிரானது ஆங்காங்கே வாடி காய்ந்து காணப்படும். கதிர் விடும் தருணங்களில் இப்புழுவின் தாக்குதல் இருக்கும் பொழுது வெளிவரும் கதிர்கள் வெண்கதிர்களாக வரும். கதிரை பிடித்து இழுத்தால் எளிதாக வெளியே வந்துவிடும். எனவே விவசாயிகள் இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 சிசி வீதம் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு வயலில் கட்டிவிட வேண்டும். இதனால் முட்டைகள் அழிக்கப்படுகின்றன. மேலும் இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 இடங்களில் வைப்பது மற்றும் ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைப்பதன் மூலமும் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க முடியும். ரசாயன முறை கட்டுப்பாடாக ஏக்கருக்கு தயோமீத்தாக்சிம் 400 மிலி அல்லது ப்ளூ பென்டமைடு 480 எஸ்சி என்ற மருந்தினை ஏக்கருக்கு 20 மில்லி வீதம் விசைத் தெளிப்பான் எனில் 60 லிட்டர் நீருடனும் கைத்தெளிப்பான் எனில் 200 லிட்டர் நீருடன் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே விவசாயிகள் வயலை சரியான நேரத்தில் கண்காணித்து மேற்கண்ட கட்டுப்பாடு முறைகளை பின்பற்றி அதிக மகசூல் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நெற்பயிரில் காணும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குநர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Tilakavathy ,Madhukur ,
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்