×

சேலத்தில் செயல்படும் விதை விற்பனை கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

ஓமலூர், ஜூன் 25: சேலத்தில் செயல்படும் விதை விற்பனை கடைகளில், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் கோவை தலைமை அலுவலகத்தில் இருந்து, விதை ஆய்வு இணை இயக்குநர் சேகர், சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் நாசருடன் ஆய்வுகள் மேற்கொண்டார். சேலம் அலுவலகத்தில் விதை ஆய்வாளர்களுடன் விதை ஆய்வுத்திட்ட முன்னேற்ற அறிக்கை, விதை ஆய்வாளர்களின் பகுதி வாரியாக, அவர்களது இலக்கு மற்றும் சாதனை குறித்தான ஆய்வுகள் மேற்கொண்டனர். இதையடுத்து, விதை ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். சேலம் மாவட்டத்தில், விதை இருப்பு நிலைகளை கண்டறிந்து, பருவமழை தொடங்கும் முன்பு, தரமான விதைகள், உரிய பருவத்தில் கிடைக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், அலுவலக மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் ஆய்வுக்கு சென்ற விவரத்தினை அறிந்து, அதிக அளவில் விதை மாதிரி எடுத்து தரத்தினை உறுதி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார். பின்னர் கொண்டலாம்பட்டி, மெய்யனூர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது விற்பனை நிலையங்களில் விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை நிலவரம், கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதைமாதிரி ஆய்வறிக்கை, பதிவுச்சான்று ஆகியவை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய ஏதுவாக உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், விற்பனை நிலையங்களில் உண்மை இருப்பு மற்றும் புத்தக இருப்பு சரிபார்க்கப்பட்டது. கொள்முதல் பட்டியல், விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கப்பட்டு உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். பதிவெண்கள் சான்றிதழ் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை பெற்று விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். தொடர்ந்து மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கம் தற்பொழுது தீவிரமாக உள்ளதால், ஒருங்கிணைந்த முறையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு மக்காச்சோளத்துடன் பயறுவகைகள், சூரியகாந்தி ஒரு ஹெக்டருக்கு 4 கிலோ அல்லது எள் 500கிராம் வழங்கிட அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர், விதை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Sale Stores ,Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...