×

போதமலைக்கு சாலை வசதி கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராசிபுரம், ஜூன் 25: வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது போதமலை. இங்குள்ள கீழூர், மேலூர், கெடமலை உள்ளிட்ட குக்கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைத்து தேவைக்கும் சமவெளி பகுதிக்கு தான் வர வேண்டும். இதற்காக சுமார் 10 கி.மீ., தூரத்தை கால்நடையாகவே கடக்கின்றனர். மலையில் விளையும் விளைபொருட்களை தலைச்சுமையாகவே சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டோரை தொட்டில் கட்டி எடுத்துச்செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனால், ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில், போதமலைக்கு தார்சாலை வசதி செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், போதமலைக்கு செல்ல தார்சாலை வசதி செய்து தர வலியுறுத்தியும், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், ராசிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சின்னகுப்பன், பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மலைவாழ் சங்கத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் விஸ்வராஜூ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீனிவாசன், விடுதலை களம் நிறுவனர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, மாதேஸ்வரன், ஜெயவேல் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர், தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

Tags : Protesters blockade taluk office ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா