100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் ராசிபுரத்தில் பிடிஓ அலுவலகம் முற்றுகை

ராசிபுரம், ஜூன் 25:  ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, மேட்டுக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ்(100 நாள் வேலை திட்டம்) பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆண்டுக்கு 10 நாள், 20 நாள் மட்டுமே பணி ஒதுக்கீடு செய்வதாகவும், அதுவும் குறைவாக கூலி வழங்கப்படுவதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதிக வேலை வழங்குவதாகவும் பயனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பணிக்கு வராத தொழிலாளர்களின் பெயரை பயன்படுத்தி, வேலைக்கு வந்ததுபோல் கணக்கு காட்டி பணம் எடுத்து அதிகாரிகள் துணையோடு பொறுப்பாளர்கள் முறைகேட்டில் ஈடுபவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், முறைகேட்டை கண்டித்தும், முறையாக பணி வழங்க கோரியும் நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து பயனாளிகள் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தனர். ஆனால், முறைகேடு தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், ‘100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. முறையாக வேலைக்கு வருபவர்களை களையெடுத்து வருகின்றனர். வேலைக்கு வராதவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் வேலை செய்தது போல் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சிலருக்கு புதியதாக அட்டையும் பதிவு செய்வதில்லை. இந்த வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. ஆளுங்கட்சியினர் கைகாட்டுபவர்களுக்கு மட்டும் அட்டை போடுகிறார்கள். சிலருக்கு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வேலை தருகிறார்கள். எனவே, 100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : PDO ,office blockade ,
× RELATED ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை