மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது

பரமத்திவேலூர், ஜூன் 25: பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே, தாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம். இவர், தனது தோட்டத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளார். கடும் வறட்சியால் ஆழ்துளை கிணற்றில் கம்ப்ரசர் மின் மோட்டார் வைத்து, தண்ணீர் எடுத்து விவசாய நிலத்திற்கு பாய்ச்சி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றார். அப்போது, மின்மோட்டார் காணாததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு  தகவல் தெரிவித்தார். அவர்கள் அப்பகுதியில் புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பரமத்திவேலூர்-திருச்செங்கோடு சாலையில் உள்ள அழகுகிணற்றுப்பாளையம் அருகே, சாக்கு மூட்டையுடன் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டு விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் சண்முகம் தோட்டத்திலிருந்த கம்ப்ரசர் மின்மோட்டார் இருந்தது. உடனே, இருவரையும் மடக்கி பிடித்து நல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திடுமல் ராசாம்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் நாட்ராயன்(23), சேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் வீரமணி(27) என்பது தெரியவந்தது. இருவரும் மின்மோட்டாரை திருடியதையும் ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், மின்மோட்டாரை கைப்பற்றினர். பின்னர், பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED ஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா?