×

நாமக்கல் அருகே அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியில் இருந்து திருச்சிக்கு செங்கல் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த லாரிக்கு தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ் சான்றிதழ், டிரைவர் சங்கரிடம் டிரைவிங் லைசென்ஸ் போன்றவை இல்லை என்பது தெரியவந்தது. மேலும், சாலை வரியும் அந்த லாரியின் உரிமையாளர் செலுத்தவில்லை. அத்துடன் லாரியில் 10 டன் செங்கல் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு விறகு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அதற்கு சாலை வரி செலுத்தாதது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 38 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. சாலை விதிமுறைகளை மீறி இயக்கியதாக ₹1 லட்சம் வரை வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை