×

ஆன்லைன் போட்டித்தேர்வில் குளறுபடி திருச்செங்கோட்டில் தேர்வு எழுதிய 1300 பேருக்கு மறுதேர்வு

நாமக்கல், ஜூன் 25: கணினி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆன்லைன் போட்டித்தேர்வில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து திருச்செங்கோட்டில் தேர்வு எழுதிய 1300 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையத்துக்குள் மாணவ, மாணவியர் செல்போன் கொண்டு வந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைனில் போட்டித்தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், மல்லசமுத்திரத்தில் உள்ள 3 தனியார் பொறியியல் கல்லூரியில் 3400 பேர் தேர்வு எழுதினார்கள். இதில், திருச்செங்கோடு தேர்வு மையத்தில் 1300 பேர் தேர்வு எழுதினார்கள்.
இந்த மையத்தில் நடைபெற்ற தேர்வின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வு தடைப்பட்டது. மாணவ, மாணவியர் முழுமையாக தேர்வு எழுத முடியாத நிலை உருவானது. தேர்வு மையத்துக்குள் அத்துமீறி செல்போனை கொண்டு சென்றதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், கூட்டாக அமர்ந்து தேர்வில் காப்பி அடித்துள்னர். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப் குரூப்களில் வெளியாகியுள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வினை தான் தனியார் நிறுவனம் தான் நடத்தியது. தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளர் நியமனம், தேர்வினை நடத்தியது என அனைத்தையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொண்டது. தேர்வு எழுத வந்தவர்கள் மையத்துக்குள் செல்போன் கொண்டு வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செங்கோட்டில் தேர்வு எழுதிய 1300 பேருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுதேர்வு அறிவித்துள்ளது. மற்ற 2 மையங்களில் நடைபெற்ற தேர்வில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. எனவே, அங்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றனர்.


Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்