×

குமாரபாளையத்தில் புதிய சாலையில் புதைந்து சரிந்த சரக்கு லாரி

குமாரபாளையம், ஜூன் 25: குமாரபாளையத்தில் புதியதாக போடப்பட்ட தார் சாலையில் சென்ற சரக்கு லாரி திடீரென புதைந்து சரிந்தது. குமாரபாளையம் நகராட்சியில் தரமற்ற பணிகள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையில் நேற்று மதியம் ரேஷன் பொருட்களை இறக்கச்சென்ற சரக்கு லாரி திடீரென புதைந்தது. சாலைக்கடியில் குறுக்காக செல்லும் சிறுபாலம் உடைந்து சக்கரம் புதைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், லோடு ஏற்றும் தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். அரசு பள்ளிகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து காணப்படும். நடுரோட்டில் லாரி சிக்கியதால் அந்த வழியாக சுமார் இரண்டு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கிரேன் கொண்டுவரப்பட்டு போராடி புதைந்த லாரியை மீட்டனர்.

குமாரபாளையம் நகராட்சியில் நடைபெறும் பணிகளில் தரம் குறைந்து போனதாகவும், தரத்தை பற்றி கவலைப்படாத அதிகாரிகளால்தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் விசைத்தறி ஜவுளி நிறுவனங்கள், சாய ஆலைகள், வீட்டு கட்டுமான பணிகளுக்கான கல் மணல் லாரிகள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் வந்து செல்லும் இது போன்ற சாலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் பணிகளில் தரம் குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டினை அவர்கள் முன்வைத்தனர்.

Tags : road ,Kumarapalai ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...