ராசிபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராசிபுரம், ஜூன் 25: ராசிபுரம் அருகே மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து ₹3 லட்சம் நகை மற்றும் உண்டியல் பணத்தை, மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோயிலில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உள்ளிட்ட பொருட்களை, கோயிலுக்குள் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பூஜைகள் முடிந்து,  பூசாரி பழனி, கோயில் கதவை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கோயிலுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கோயிலுக்கு வந்த மர்ம ஆசாமிகள், கோயிலுக்கு வெளியே இருந்த வேல்களை எடுத்து பூட்டை  உடைத்து, உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை அள்ளிச்சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச்செல்லும்போது, அம்மனுக்கு படைத்திருந்த வாழைப்பழங்களை சாப்பிட்டு விட்டு, தோல்களை கோயில் முன் வீசி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் ₹3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Temple ,robbery ,Rasipuram ,
× RELATED மார்த்தாண்டம், திருவட்டாரில் துணிகரம்: கோயில், மளிகை கடையில் கொள்ளை