×

குடியிருப்பு பகுதியில் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி, ஜூன் 25: தர்மபுரி டவுன் சூடாமணி தெருவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில், தனியார் மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தர்மபுரி டவுன், சூடாமணி தெருவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி டவுன் சூடாமணி தெருவில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவில் இருபுறமும் குடியிருப்பு வீடுகள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2500 சதுர அடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்த வீட்டை இடித்து விட்டு, தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

போதிய இடவசதி இல்லாத இந்த தெருவில், மருத்துவமனை கட்டப்பட்டால், இங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே, இந்த தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி, தனியார் மருத்துவமனைகள் பல வருடமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், இந்த தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள் எளிதில் சென்றுவர முடியவில்லை. இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை, அமைதியையும், வசதியையும் குலைக்கும் வண்ணம் உள்ளது. எனவே, விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



Tags : protest ,hospital ,area ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...