கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

காரிமங்கலம், ஜூன் 25: காரிமங்கலம் அருகே, அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பூசாரியாக  உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்,  பூஜை முடிந்து வழக்கம் போல் கோயில் நடையை  சாத்திவிட்டு, மாணிக்கம் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. இதனை  பார்த்த பொதுமக்கள், பூசாரியிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் கோயிலுக்கு சென்று  பார்த்த போது, அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த உண்டியலில் காணிக்கை பணம் ₹10 ஆயிரம் வரை இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து,  மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காரிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதமாகவே, திருட்டு நடப்பது வாடிக்கையாக உள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள், தற்போது கோயிலையும் விட்டு வைக்கவில்லை. எனவே, திருட்டு சம்பவங்களை தடுக்க, போலீசார்  தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.
Tags : Temple ,robbery ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயிலில்...