தளி, வேப்பனஹள்ளி, ஓசூர் தொகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜூன் 25: தளி, வேப்பனஹள்ளி, ஓசூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்எல்ஏக்களான தளி பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகியோர், நேற்று கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பது: ஓசூர் தொகுதியில் அச்செட்டிப்பள்ளி முதல் பாகலூர் வரையும், அச்செட்டிப்பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி, நந்திமங்கலம் பகுதியிலும் சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, இது குறித்து எம்எல்ஏக்கள், விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். தளி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இங்குள்ள 30 சதவீத கிராமங்களுக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சென்றடையவில்லை. எனவே, ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தி, அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்டமுகிலாளம் முதல் காளிகட்டம் வரையும், உரிகம் முதல் பிலிக்கல் வரையும், மாடக்கல் ஊராட்சி சூலகுண்டா முதல் உளிபண்டா வரையும், உரிகம் ஊராட்சி அஞ்செட்டி-உரிகம் சாலையில் இருந்து உடுபராணி வரையும், பெட்டமுகிலாளம் ஊராட்சி கெத்தஅள்ளி முதல் துளுவபெட்டா வரையும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேப்பனஹள்ளி தொகுதியில் உப்பரத்தமண்டரப்பள்ளியில், ஏழை கூலித் தொழிலாளர்கள் 41 பேரின் குடும்பத்திற்கும், சின்னாற்றில் உள்ள 50 குடும்பங்களுக்கும், பீமாண்டப்பள்ளி ஊராட்சி பாறையூர், ஒட்டூர், கணபதி நகர் பகுதியில் உள்ள 75 குடும்பங்களுக்கும், ஐப்பிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நாச்சிகுப்பம் ஊராட்சி ஜோடுகொத்தூர், கோடிப்பள்ளி ஊராட்சி குட்டப்பள்ளி, நாடுவனப்பள்ளி ஊராட்சி குருவரெட்டிபோடூர் கிராமங்களுக்கு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். கே.திப்பனப்பள்ளியிலும், யு.குருபரப்பள்ளியிலும் இந்திரா நினைவு குடியிருப்பில், பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும்.  காளிங்காவரம் ஊராட்சி சிம்பில்திராடியில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். மேல்பிக்கனப்பள்ளியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும். ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: