×

ஆழ்துளை கிணறு அமைத்ததில் முறைகேடு தர்மபுரி பிடிஓ சஸ்பெண்ட்

தர்மபுரி, ஜூன் 25: ஆழ்துளை கிணறு அமைத்ததில் முறைகேடு செய்ததாக,  தர்மபுரி பிடிஓவை கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தர்மபுரி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ஆனந்தன். இவரது வாகன ஓட்டுனர்களில் ஒருவரது வீடு, தர்மபுரி அருகே மூக்கனூர் கிராமத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிடிஓவின் டிரைவர் வீட்டிற்குள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்த பணியை அரசு இடத்தில் ஆழ்துளை அமைத்ததாக, பிடிஓ ஆனந்தன் போலி ஆவணம் தயார் செய்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இது குறித்து கலெக்டர் மலர்விழி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், பிடிஓ ஆனந்தன் முறைகேடாக ஆழ்துளை கிணறு அமைத்ததும், அதற்காக போலி ஆவணம் தயார் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் மலர்விழி பிடிஓ ஆனந்தனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Dharmapuri PDO ,
× RELATED தர்மபுரி பிடிஓ அலுவலகத்திற்கு...