தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்

தஞ்சை, ஜூன் 25: குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாரதி தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2018ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர் நிலை அமைப்புகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.11.09 கோடி ரூபாய் ஒதுக்கியது. தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்டத்தில் 19 பணிகள் மேற்கொள்ள ரூ.3.17 கோடியும், வெண்ணாற்று வடிநில கோட்டத்தில் 16 பணிகள் மேற்கொள்ள ரூ.2.46 கோடியும், கல்லனைக்கால்வாய் கோட்டத்தில் 13 பணிகள் மேற்கொள்ள ரூ.2.78 கோடியும், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்டத்தில் 11 பணிகள் மேற்கொள்ள ரூ.1.41 கோடியும் ஒதுக்கப்பட்டது.நிர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாருதல், மதகுகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக நடைபெறாததால் காவிரி கரைபுறண்டு ஒடியும் பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர். திருவோணம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் சென்று சேராமல் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர் நிலை அமைப்புகளை சீரமைக்க கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.11.09 கோடி ரூபாய் ஒதுக்கியும் அதன் நோக்கம் முழுவதுமாக நிறைவேறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள குடிமராமத்து பணிகளை கண்காணித்து முறையாக செயல்படுத்திட வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திட வேண்டும். மேற்கண்ட கூட்டத்தில் முன்வைக்கபடும் கருத்துக்களின் அடிப்படையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

Tags : committee ,district ,Tanjore ,
× RELATED தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை...