×

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் 31 விதை மாதிரிகள் தரமற்றவையாக அறிவிப்பு தரத்தை அறிய பரிசோதனை நிலையத்தை அணுகலாம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூரில் உள்ள பரிசோதனை நிலையத்தில் 404 விதை மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 31மாதிரிகள் தரமற்றது என அறிவித்து விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதைகளின் தரத்தை அறிய விதை பரிசோதனை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் லீமாரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்துக்கான விதை பரிசோதனை நிலையமானது, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிய முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத்தன்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.2019-20ம் ஆண்டுக்கு நடப்பு மாதம் வரை 300 விதை மாதிரிகள் பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 404 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 31 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதை ஆய்வகத்தில் இதுவரை விதை பண்ணையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு விதைச்சான்று துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட 271 விதை மாதிரிகள், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் குவியல்களில் இருந்து விதை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட 96 மாதிரிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் வைத்துள்ள விதை குவியல்களிலிருந்து எடுக்கப்பட்ட 37 விதை மாதிரிகள் என கூடுதலாக 404 விதைமாதிரிகள் பரிசோதனை செய்ததில் தரமற்றது என சான்று விதை 21எண்கள், பணி விதைமாதிரிகள் 10 எண்களும் கூடுதல் 31 மாதிரிகள் தரமற்றது என அறிவிக்கப்பட்டது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆடிப்பட்டத்தில் மக்காசோளம், பருத்தி, நெல், சோளம், உளுந்து, கம்பு, பயறுவகை பயிர்கள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு தேவையான தரமான விதையே நல்ல விளைச்சலுக்கு அடிப்படை ஆதாரம். தரமான விதைகளை விதைத்தாலே 50 சதவீத விளைச்சலுக்கு உத்தரவாதமாகும். அவ்வளவு முக்கியமான விதையை தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைக்க வேண்டும். எனவே சாகுபடி செய்யப்படவுள்ள விதை குவியலில் இருந்து விதைமாதிரி விதைகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் விதை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதையின் சுத்தத்தன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. நன்கு சுத்தமான, தரமான விதைகளை பயன்படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெற முடியும். மேலும் நேரடி விதைப்பாக இருக்கும்பட்சத்தில் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்க முடியும்.

முளைப்புத்திறன் பரிசோதனையில் நன்கு வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், இறந்த விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கண்டறியலாம். மேலும் முளைப்புத்திறன் பரிசோதனையின் மூலம் தேவையான விதை அளவை தீர்மானிக்க முடியும். இதற்காக ஒரு பணிவிதை மாதிரியை ஆய்வு செய்ய ஆய்வு கட்டணமாக ரூ.30 மட்டுமே செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும்முன் விதைகளை பகுப்பாய்வு செய்ய மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட மைய நூலகம் அருகில், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பி விதை தரத்தை அறிந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ariyalur district ,Perambalur ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...