×

சித்திரை கார் நடவு நெல் அறுவடை துவக்கம் தா.பழூரில் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தா.பழூர், ஜூன் 25: தா.பழூர் ஒன்றயத்தில் 1000 ஹெக்டர் நிலங்களில் சித்திரை கார் நடவு அறுவடை துவங்கியது. இதனால் தா.பழூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைக்குறிச்சி, அருள்மொழி, அணைக்குடி, புரந்தான், வாழைக்குறிச்சி, மதனத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்மூழ்கி மோட்டார் மூலம் விவசாயம் செய்யப்பட்ட நடவு நெல் பயிர்களின் அறுவடை துவங்கியுள்ளது. குறுகிய கால பயிராக ஏடீடீ 45 என்ற நெல் ரகம் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது. தா.பழூர் ஒன்றயத்தில் மொத்தம் 1000 ஹெக்டர் நிலங்களில் சித்திரை கார் நடவு செய்யப்பட்டுள்ளது.காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாய கூறுகையில், தற்போது பருவ காலத்தில் பொழிய வேண்டிய மழை இல்லாத காரணத்தாலும், மின்சாரம் தட்டுப்பாட்டதாலும் சித்திரை கார் நடவு போதியளவு விளைச்சல் இல்லை.அதுபோல் நெல் கொள்முதல் விலையும் சரியான விலையில் இல்லை. விதை நெல் 35 ரூபாய் கொடுத்து வாங்கும் விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யும்போது அரசு ரூ.15 முதல் ரூ.20 வரையே கொள்முதல் செய்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆள்கூலி 150 ரூபாய். தற்போது ரூ.250ல் இருந்து ரூ.300 வரை உள்ளது. ஆனால் 150 ரூபாய் சம்பளம் கொடுத்த காலத்திலிருந்து தற்போது விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் விலையில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை.

தொடர்ந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாமல் அரசு உள்ளது. விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நெல் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் சித்திரை கார் நடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் விளைவித்த நெல்களை ஜெயங்கொண்டம் விற்பனைக்கூடம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. போதிய விலை இல்லாததால் விளைவித்த பயிர்களை ஜெயங்கொண்டம் கமிட்டிக்கு கொண்டு செல்லவாகும் செலவுகளை பார்க்கும்போது இடைத்தரகர்களிடம் விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அறுவடை நடந்து கொண்டிருக்கும் நெல்களை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Tags : Car Planting ,Paddy Harvesting Begins Farmers ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது