×

விவசாயிகள் திரண்டனர் சீர்காழி அருகே பாலம் பழுதால் இரு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம்

சீர்காழி, ஜூன் 25:சீர்காழி அருகே பாலம் பழுதானதால் இரு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கம்பி நடை பாலத்தை கடந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரவேண்டும். குறிப்பாக புதுத்துறை ஊராட்சியில் வெள்ளப்பள்ளம் கிராமம் இருப்பதால் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம், ஊராட்சி அலுவலங்களுக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் நடந்து செல்லும் அளவில் சிறிய கம்பி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் சில ஆண்டுகளில் பழுதடைவதும் அதனை மாற்றி விட்டு புதிய பாலம் கட்டுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த பாலங்கள் கட்ட ஒவ்வொரு முறையும் ரூ.5 லட்சம், ரூ 10 லட்சம், ரூ 15 லட்சம் என நிதி என ஒதுக்கப்படுகிறது. ஆனால் வெள்ளப்பள்ளம் பகுதி மக்களுக்கு நிரந்தரமாக பாலம் கட்ட தீர்வு கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பள்ளம் ஆற்றில் கட்டப்பட்ட கம்பி பாலம் பழுதடைந்ததால் வெள்ள பள்ளத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புதுத்துறை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அப்போது வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் ரூ.15 லட்சத்தில் புதிய கம்பி பாலம் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பாலமும் சிதிலமடைந்து பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புக் கம்பிகள் இல்லாததால் பாலத்தை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். கம்பி பாலம் எப்போது வேண்டுமானாலும் ஆற்றில் உடைந்து விழும் அபாயம் உள்ளது. அப்படி பாலம் ஆற்றில் உடைந்து விழுந்தால் வெள்ளப்பள்ளம் கிராமம் துண்டிக்கப்படும் இதனால் அனைவரும் ஆற்றில் இறங்கி தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நேரிடும். இதனால் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு முறையும் பாலம் கட்ட நிதி ஒதுக்குவதும், அந்த பாலம் சில ஆண்டுகளில் சிதலமடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இதுவரை வெள்ளப்பள்ளம் ஆற்றில் நடைபாலம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு பெரிய அளவில் வாகனங்கள் சென்று வரும் வகையில் காங்கிரீட் பாலம் கட்டியிருக்கலாம். இதனால் அப்பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டிருக்கும். இனியும் சிறிய கம்பி பாலம் கட்ட நிதி ஒதுக்காமல் நிரந்தரமாக போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் காங்கிரீட் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Sirkazhi ,
× RELATED கொள்ளிடம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை