×

நொய்யல், புகழூர் பகுதியில் கழிவு நீரால் வெற்றிலை பயிர்கள் பாதிப்பு

கரூர், ஜூன் 25: நொய்யல் கழிவுநீரால் வெற்றிலை பயிர்கள் பாதிக்கப்படுகிறது.கரூர் புகழூர் வட்டாரத்தில் புகழூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால்., பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல், நெரூர் வாய்க்கால்கள் மூலமாக வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. அருகில் உள்ள நாமக்கல் வெற்றிலை மார்க்கெட்டிலும் உள்ளூர் மார்க்கெட்டிலும் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நொய்யல் மற்றும் காவிரியில் சாயக்கழிவு மற்றம் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கிறது. தொடர்ந்து நொய்யலில் கழிவுநீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இது தொடர்கதையாகவே இருக்கிறது. மண்வளம் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது.நொய்யல் புகழூர் பகுதியில் இதன் காரணமாக வெற்றிலை கொடிகளில் கணு அழுகல், இலைப்புள்ளி வாடல்நோய் போன்ற நோய்களால் உற்பத்தி குறைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தொடர்கதையாக இருக்கிறது. பெருவெள்ளக்காலங்களில் கலந்தாலும் அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சியாளர்களிடம் புகார் செய்தால் சொல்கிறோம் செய்கிறோம் என்பதோடு நின்று விடுகிறது. நடவடிக்கையைக் காணோம். நடந்து முடிந்த எம்பி தேர்தலிலும் சரி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் சரி இதனை ஒரு வாக்குறுதியாக அளித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசும், 8 ஆண்டுகளாக மாநில அரசும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த ஆண்டு கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும் அந்த நீரைப்பயன்படுத்தி சாகுபடி செய்த வெற்றிலையில் கூட நோய் தாக்குதல் எற்பட்டு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வேளாண்துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் பார்வையிட்டு பூச்சிநோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண்பதுதான் நிரந்தர பரிகாரமாக இருக்கும் என்றனர்.


Tags : Noyyal ,Puzhur ,
× RELATED கோவை மாவட்டத்தில் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு