×

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்

கரூர், ஜூன். 25: இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தாலும், தொடர்ந்து அகதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தாலும் 30 ஆண்டுகளாக அகதிகள் என்ற பெயரோடு வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.இந்தியாவில் பிள்ளைகள் பிறந்து, படித்து, வளர்ந்து இன்று அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அவர்கள் இங்கேயே பிறந்து படித்திருந்தாலும் அவர்களால் அரசு வேலைகளுக்கோ அல்லது போட்டித் தேர்வுகளுக்கோ செல்ல இயலவில்லை.விரும்பிய இடத்தில் விரும்பிய துறைகளில் படிப்பதற்கோ, வேலைகளில் சேர்வதற்கோ இயலவில்லை. சொந்த நாட்டிலேயே மூன்று தலைமுறைகளாக அகதிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு ஆறுதலை தருகிறது.எங்களது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் இந்தியாவில் பிறந்து வறுமையின் காரணமாக பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கையின் தோட்ட தொழில்களுக்கு சென்றவர்கள். நாங்கள் அனைவரும் இந்திய வம்சாவழியினர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாக இருந்தும் அகதியாகவே வாழ்ந்து வருகிறோம். எனவே எங்கள் நிலையை கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை மீட்டு தரக்கோரி பெண் மனு:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் ரேவதி மாலா. இவர் கலெக்டர் அன்பழகனிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், எனக்கும் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. கோவையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த கணவருடன் வசித்து வந்தேன். கடந்த 2018ம் ஆண்டு முதலாளிக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவரை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.தொடர்ந்து நாங்கள் அரவக்குறிச்சிக்கு வந்த போது உன் மனைவி வந்த நேரம்தான் தொழில் போய்விட்டது. எனக் கூறி எனது குழந்தையை பறித்துக் கொண்டு அனுப்பி விட்டு விட்டனர். கடந்த 4 மாதமாக குழந்தையை பார்க்க முடியவில்லை. என்ன ஆனது என்பது கூட தெரியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குழந்தையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.




Tags : Sri Lankan Tamils ,Indian ,
× RELATED பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன்...