காந்தி கிராமம் தெற்கு, வடக்கு, தாந்தோணிமலையில் பழுதடைந்து கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

கரூர், ஜூன் 25: பழுதடைந்து கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சீர்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமம் தெற்கு, வடக்கு மற்றும் தாந்தோணிமலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. காந்திகிராமத்தில் 120 வீடுகள், தாந்தோணிமலையில் சுமார் 108 வீடுகள்,. வடக்குகாந்தி கிராமத்தில் 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடியிருந்து வருகின்றனர்.கரூர் கடந்த 1995ம் ஆண்டு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1996ல் வடக்குகாந்தி கிராமத்தில் குடியிருப்பு கட்டப்பட்டது. இவை எதிலும் பராமரிப்பு பணிகள் கிடையாது. கடந்த 10 ஆண்டுளாக குடியிருப்போர்களே பராமரிப்பு வேலைகளை செய்து சமாளித்து வருகின்றனர்.இதனால் வீடுகளின் பின்புற சுவர்கள் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. கூரைப் பகுதிகளில் உள்ள காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. கட்டிடத்தை கட்டி வாடகைக்கு விடுவதோடு சரி, அதன் பின்னர் எந்தவித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதில்லை என குடியிருப்போர் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியது:பராமரிப்பு இல்லை. இதனால் கட்டிடங்கள் பெயர்ந்து சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் பின்பகுதியில் உள்ள பகுதி பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. புதிதாக வருபவர்கள் தான் இதனை பழுதுபார்க்கின்ற கட்டாயம் ஏற்படுகிறது. மராமத்து பணிகளை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் எதையும் செய்வதில்லை., அவ்வப்போது வெளிப்புறம் மட்டும் ஏதாவது சிமெண்ட் பூச்சு வேலைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி வீட்டிற்குள் எந்த மராமத்து வேலையையும் செய்வதில்லை. இரவு நேரங்களில் கண்டவர்கள் நடமாட்டமும் குடியிருப்பு பகுதியில் உள்ளது. சாக்கடை செப்டிக் டேங் அடைப்பு சரி செய்வதில்லை. செப்டிக் டேங்க் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம். திருச்சியில் இருந்து உரிய அதிகாரிகள் வந்து தான் எதையும் செய்யும் நிலை உள்ளது.சராசரியாக 35 சதவீதம் தான் தான் குடியிருக்கின்றனர். பழுதாகி கிடப்பதாலும், வாடகையை பல மடங்கு கேட்பதாலும் பலர் காலி செய்து வருகின்றனர். மராமத்து பணிகளை மேற்கொண்டு மீண்டும் வாடகைக்கு விட வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் காலியாக இருப்பதால் அரசுக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது. எனவே உடனுக்குடன் குடியிருப்பதற்கு ஏற்ற வகையில் இருக்குமாறு வேலைகளை செய்ய வேண்டும். ஆண்டுக்கணக்கில் வீடுகள் காலியாக இருப்பதை தவிர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை.

அரசு ஊழியர்கள் பலர் வீடு கிடைக்காமல் அலைந்து கொண்டும் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வீட்டுக்கு வருவோரிடம் ஏற்கனவே செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளை செலுத்துமாறு கூறி கட்டாயமாக வசூலிக்கின்றனர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செலுத்த வேண்டிய, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றை புதிதாக வருபவர்கள் செலுத்த வேண்டியதாகிறது. அரசு ஊழியர் குடியிருப்பில் பராமரிப்பு என்பதே இல்லை. 5 ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ தான் மராமத்து பணிகளை மேற்கொள்கின்றனர். அதுவும் வீட்டின் வெளிப்பகுதியில் தான் இந்த பணியும் நடக்கிறது. வாடகைக்கு வருபவர் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை செலவு செய்து தான் குடி வர வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆங்காங்கே எலிகள் மண்ணை பறித்து போட்டுள்ளன. குடியிருப்பு பகுதி முழுவதும் குழிகளாக காணப்படுகின்றன. சுகாதாரக் கேடாக இருக்கிறது. வடிகால்கள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் கொசுத்தொல்லை ஏற்படுகிறது.
குடிநீர், மின்சாரம் சம்பந்தப்பட்ட துறையினர் விநியோகித்தாலும் பராமரிப்பு வேலைகளை வாரியம் தான் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் திருச்சியில் உள்ளது. எந்த ஒரு தேவைக்கும் அங்கு தான் சென்று வர வேண்டிய நிலைமை இருக்கிறது. கரூர் பகுதியில் 3 குடியிருப்புகள் இருப்பதால் இங்கேயே ஒரு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காம்பவுண்டு சுவர் இல்லாமல் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இப்பகுதி தனியாக இருந்தது. தற்போது சுற்றி புதிய குடியிருப்புகள் உள்ளன.குடிநீர் பணிகள், வடிகால் பணிகள் போன்றவை நகராட்சி வசம் உள்ளது. இவற்றுக்கு நகராட்சி அதிகாரிகளிடமும், வீடு மராமத்து செய்ய வேண்டிய பணிகளுக்கு திருச்சிக்கும் போக வேண்டியதிருக்கிறது. குடிநீர் கட்டணத்தையும், மின்சார கட்டணத்தையும் அவரவர் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பெயரில் வீட்டு எண்ணை குறிப்பிட்டு கட்டி வருகிறோம். இப்பணிகளை ஒருங்கிணைப்பு செய்ய வீட்டுவசதி வாரியம் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். பிறதுறை பணிகளை கண்காணித்து மற்ற துறையினரோடு பேசி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.


Tags : Gandhi Village ,housing board ,South ,North ,Tandonimalai ,
× RELATED வீட்டு வசதி வாரிய அலுவலகம் இடமாற்றம்