×

திட்டப்பணிகளை நிறைவேற்றி

தோகைமலை, ஜூன் 25: திட்டப்பணிகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் எடப்பாடி அரசு யாகம் வளர்ப்பதா என தோகைமலையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி சூடான கேள்வி விடுத்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு கையாலாகாத எடப்பாடி அரசு தமிழக மக்களின் நலன்களுக்காக முக்கியத்துவம் தருவதில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களை சேர்ந்த 253 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து நபார்டு, ஆர்ஐடிஎப் திட்டத்தில் ரூ.52.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 24.2.2016 அன்று பணிகள் தொடங்கி 24.5.2018க்குள் பணிகள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த பணிகள் 50 சதவீதம் கூட முடிவு பெறாமல் ஆமைவேகத்தில் இன்னும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற திட்டப்பணிகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் எடப்பாடி அரசு யாகம் வளர்த்து வருகிறது. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்த பின்பு தமிழக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிதியானது தமிழகம் முழுவதும் மினி டேங்க் அமைக்கவே போதுமானதாக இருக்காது. ஆகவே வெறும் கண்துடைப்பாகவே ஒதுக்கி உள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க ஆய்வு கூட்டம் நடத்தினார். ஆனால் 4 எம்எல்ஏக்கள் உள்ள கரூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்னையில் உள்ள தொகுதியான அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை எம்எல்ஏக்களை புறக்கணித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி உள்ளார். ஆகவே கரூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைகளை முன்வைத்து இரு எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நெசவாளர் அணி பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், கர்ணன், சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட பொறியாளர் அணி பிரசாந்த் உள்பட குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தரகம்பட்டியில் நடந்தது. திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் ரவிராஜா, ரகுநாதன், மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவூர் ஒன்றியச் செயலாளர் பிச்சை வரவேற்றார். செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அரசு இயந்திரம் சரியாக செயல்பட வேண்டும் என்றார்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்