×

டிராக்டர் மீது லாரி மோதி இரண்டு வாலிபர்கள் சாவு

திருமங்கலம், ஜூன் 25: திருமங்கலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதியதில் சாத்தூரை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள நத்தத்துபட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பரமசிவபாண்டி(20). சாத்தூர் மேட்டுபட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகன் மருதுபாண்டி(22). இருவரும் நண்பர்கள். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெறும் டவர் அமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் இரவு இருவரும் சாத்தூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு நத்தத்துபட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரது டிராக்டரில் சென்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது சிவகாசியிலிருந்து மதுரை நோக்கி சென்ற லாரி டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டர் லாரியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் அடியில் சிக்கி பரமசிவபாண்டியும், டிராக்டரை ஓட்டி சென்ற மருதுபாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் சிவகாசி, முருகன்காலனியை சேர்ந்த மாரிமுத்து படுகாயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்குவழிச் சாலையில் நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கிணற்றில் தூர்வரும்போது பரிதாபம் மண்...