×

தீபாவளி முன்பதிவு தொடங்கியது தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்

அருப்புக்கோட்டை, ஜூன் 25: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற அக்.27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொழில், வியாபாரம், படிப்பு நிமித்தமாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல கார், ரயில், பஸ் மற்றும் விமானங்களில் முன்பதிவு செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 120 நாட்களுக்கு முன்னதாகத்தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்.21ம் தேதி ரயிலில் செல்ல நேற்று முன்தினம், 22ம் தேதி ரயிலில் செல்ல நேற்றும் முன்பதிவு நடந்தது. 23ம் தேதி ரயிலில் செல்ல இன்றும், 27ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு அன்று இரவு 8 மணி வரை நடந்தது. தெற்கு ரயில்வே இணைய தளத்தில் ஜூன் 29 காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரயில்வே துறை போதிய சிறப்பு ரயில்களை இயக்கவில்லை. லாப நோக்கத்தோடு பிரிமியம் ரயில்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

இதனால் ரயில் பெட்டிகள் அனைத்தும் காலியாகவே சென்று வந்தன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வைகை, குருவாயூர், சிலம்பு, செந்தூர் உள்ளிட்ட ரயில்களில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் அலைமோதும். எனவே, தென்னக ரயில்வே இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் கோவை, பெங்களுர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரை, செங்கோட்டை, ராமேஸ்வரம் மார்க்கமாக சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட சேர் கார் ரயில்களையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Deepavali Reservation ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி