×

8 மின்கம்பங்களை அகற்ற பணம் கட்டுவது யார்? பாதியில் நிக்குது தரைப்பாலப் பணி

விருதுநகர், ஜூன் 25: கூரைக்குண்டு ரயில்வே தரைப்பாலத்திற்கு இடைஞ்சலான மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய, மின்வாரியத்திற்கு பணம் கட்டுவதில் ரயில்வேக்கும், ஒப்பந்தகாரரும் ஏற்பட்டுள்ள பிரச்னையால், தரைப்பாலப் பணி பாதியி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கூரைக்குண்டு ஊராட்சி பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்கு செல்ல, ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டும். இந்த கிராசிங்கை மூடுவதற்கு, ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து பாதையை தடை செய்தது. ஆளில்லாத ரயில்வே கேட்டை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து கூரைக்குண்டு பாதையில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க ரயில்வே நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு தரைப்பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்கின.

ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்குப்பகுதியில் அரசு அலுவலர்கள், காவலர்கள் ஆயிரக்கணக்கில் குடியிருந்து வருகின்றனர். ரயில்வே பாதை அடைக்கப்பட்டு தரைப்பாலம் கட்டும் பணியால் தற்போது கூரைக்குண்டு ஊராட்சி மக்கள் மாத்துநாயக்கன்பட்டி ரயில்வே கேட் வழியாக 2 கி.மீ தூரம் சுற்றி சென்று வருகின்றனர். ஓராண்டிற்கு முன்பாக தொடங்கப்பட்ட கூரைக்குண்டு ரயில்வே தரைப்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தரைப்பாலத்திற்கு பள்ளம் தோண்டு பாதையில் கிழக்குப்பகுதியில் 5 மின்கம்பங்கள், மேற்கு பகுதியில் 3 மின்கம்பங்கள் என 8 மின்கம்பங்கள் தரைப்பால பாதையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை இடமாற்றி வைத்தால் மட்டுமே தரைப்பாலத்திற்கு பள்ளம் தோண்டி கட்டுமானத்தை தொடர முடியும்.

ஆனால், தரைப்பாலப் பாதையில் உள்ள 8 மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய மின்வாரியம் ரூ.1.50 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கான செலவினம் பால கட்டுமானத்தில் சேர்க்கப்படவில்லை என்பதால் ரயில்வே நிர்வாகம்தான் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.ரயில்வே நிர்வாகமோ பாலத்திற்கான ஒப்பந்தகாரர் தான் அனைத்து செலவினங்களையும் செய்து கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. ஒப்பந்தகாரர் தரைப்பால பணிகளை பாதியில் நிறுத்தி சென்று விட்டார். இதனால், கூரைக்குண்டு, மாத்துநாயக்கன்பட்டி ரோடு பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி