×

திருத்தங்கல்லில் ஊருக்கு ஒதுக்குப்புறம் கட்டியதால் பயனற்று கிடக்கும் புதிய பஸ்நிலையம் பஸ்கள், பயணிகள் புறக்கணிப்பு

சிவகாசி, ஜூன் 25: திருத்தங்கல்லில் ஊருக்கு ஒதுக்குப்புறம் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் பயணிகள், பஸ்களின் புறக்கணிப்பால், குடிமகன்களின் இரவு நேர பார் ஆக மாறி வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் சாலைகள் குறுகியதாக இருப்பதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பஸ்நிறுத்தங்களின் பயணிகளை ஏற்ற ஒரு நிமிடம் பஸ் நின்றாலும், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், அணி வகுத்து நிற்கும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகரின் மையப்பகுதியில் பஸ்நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று ரூ.3 கோடி 45 லட்சத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரியான இடம் கிடைக்காததால், உறிஞ்சிகுளம் கண்மாய் அருகில், நகரின் ஒதுக்குப்புறத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.மேலும், பஸ்நிலையத்தில் இருந்து நகருக்குள் பயணிகள் வந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான பயணிகள் காளியம்மன் கோயில், நின்ற நாராயண பெருமாள் கோயில் எதிரில் இருக்கும் பஸ்நிறுத்தங்களில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தங்களே பயணிகளுக்கு வசதியாக இருந்து வருகிறது. இவற்றை கடந்து பஸ் நிலையம் வரவேண்டும் என்றால், ஆட்டோ பிடித்து தான் வரமுடியும். இது பயணிகளுக்கு பண விரயத்தை ஏற்படுத்துகிறது. ஆரம்ப காலங்களில் பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதுவும் நாளடைவில் நின்று போனது.

மதுரை, விருதுநகர் செல்லும் பஸ்கள் பஸ்நிலையத்திற்குள் உள்ளே வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. மற்ற வெளியூர் பஸ்களும் வந்து சென்றன. தற்போது எந்த பஸ்களும், பஸ்நிலையத்திற்குள் செல்வது கிடையாது. தனியார் பஸ்கள் ஏதும் உள்ளே வருவதே இல்லை. இதனால் பயணிகள், பஸ்கள் இன்றி பஸ்நிளையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பல கோடி செலவில் கட்டப்பட்ட பஸ்நிலையம் பயனற்று கிடக்கிறது. இரவு நேரத்தில் பாராகவும், திருடர்களின் புகலிடமாகவும் பஸ்நிலையம் மாறி வருகிறது.எனவே, பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : bus station ,Tirunelveli ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...