அதிகாரிகளுடன் வாக்குவாதம் விவசாயிகள் 14 பேர் மீது வழக்கு

தேனி, ஜூன் 25: தேனி உழவர்சந்தை விவசாயிகள், நிர்வாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக 14 விவசாயிகள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி உழவர்சந்தை பெரியகுளம் ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் ரோட்டில் தேனி தாலுகா அலுவலகத்தை அடுத்து அமைந்துள்ளது. உழவர்சந்தைக்குள் 70 விவசாயிகள் கடை அமைத்துள்ளனர். வெளியில் தாலுகா அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைகள் அமைத்திருந்தனர். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்தது. சமீபத்தில் உழவர்சந்தை நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், தாலுகா அலுவலகம் முன்பு கடை போட்ட விவசாயிகளுக்கு உழவர்சந்தையை அடுத்துள்ள மீறுசமுத்திரம் ரோட்டில் கடை போட இடம் ஒதுக்கி கொடுத்தார். காய்கறி வியாபாரம் முடிந்த பின்னர்,

இந்த இடத்தில் குடிமகன்கள் மது அருந்துவதோடு, வாந்தி எடுத்தும், இயற்கை உபாதைகளை கழித்தும் மாசுபடுத்தினர். இதனால் இந்த இடம் முழுக்க மாசுபட்டு இருக்கிறது. மாசுபட்ட இடத்தில் காய்கறி விற்க விவசாயிகளும் தயங்கினர். இங்கு காய்கறி வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் முன்பு போலவே உழவர்சந்தைக்கு செல்லும் ரோட்டோரம் காய்கறி விற்ற விவசாயிகள், தங்களுக்கு பழைய இடத்தை ஒதுக்கி தருமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பலமுறை போராட்டங்கள் நடத்தினர். பலன் இல்லாததால் நேற்று முன்தினம் வழக்கம் போல் பழைய இடத்திலேயே கடை அமைத்தனர். இந்த கடைகளை அகற்றுமாறு உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் விவசாயிகளை அறிவுறுத்தினார். இவருக்கு ஆதரவாக உழவர்சந்தை விவசாயிகள் செயல்பட்டனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயிகள் கடைகளை அகற்ற மறுத்து விட்டனர். இது தொடர்பாக உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம், தேனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேனி மாவட்ட தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்னைக்கு குடிமகன்களே அடிப்படை காரணம். இவர்கள் காய்கறி விற்க ஒதுக்கப்பட்ட இடத்தை மாசுபடுத்தால் இருந்தால் இப்பிரச்னையே வந்திருக்காது. எனவே, போலீசார் குடிமகன்களை இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை அருகே வயலில் அத்துமீறி...