×

சபரிமலை ரயில்பாதை திட்டத்தில் மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு போராட்டக்குழு தலைவர் புகார்

தேனி, ஜூன் 25: திண்டுக்கல்- குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் புகூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து குமுளி அடிவாரமான லோயர்கேம்ப் வரை அகல ரயில்பாதை அமைக்க 2014ம் ஆண்டு ஆயிரம் கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. மக்களின் வளர்ச்சியில் ஆர்வம் இருந்தால் இத்திட்டத்திற்கு அப்போதே நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கியிருக்கலாம். ஆனால். இந்த ரயில்பாதை திட்டத்தை சபரிமலை வரை நீடிக்கப்போவதாக பாஜ அரசு நாடகமாடுகிறது. சபரிமலை வரை கொண்டு செல்ல லோயர்கேம்பில் இருந்து கூடுதலாக 75 கி.மீ தூரம் பாதை அமைக்க வேண்டும். தவிர இந்த 75 கி.மீ பாதை 3 ஆயிரம் அடி உயரம் உள்ள மலைகள், அடர்ந்த வனங்கள் வழியாக செல்லும். இதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க தென்னக ரயில்வே டெண்டர் வெளியிட்டது.

இந்த டெண்டரை எடுக்க கூட யாரும் முன்வரவில்லை. ஏனெனில் இது சாத்தியமில்லாத விஷயம் என்பது அவர்களுக்கு தெரியும்.தற்போது உள்ள வனச்சட்டப்படி விளைநிலங்களை கையகப்படுத்தியது போல் வனநிலங்களை கையகப்படுத்த முடியாது. தவிர வனங்களை அழித்து ரயில்வே வழித்தடம் அமைக்கவும், ஸ்டேஷன்கள், தங்குமிடங்கள் அமைக்கவும் மத்திய வனத்துறையிடமும், சுற்றுச்சூழல் துறையிடமும் அனுமதி பெற முடியாது. தவிர வழக்கமான தடத்தில் அமைக்கப்படும் செலவுகளை விட மலைப்பகுதியில் அமைக்க 4 மடங்கு நிதி கூடுதலாக செலவாகும். இப்போது இந்த திட்ட பணிகளை தொடங்கினாலும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். இவ்வளவு நிதி மத்திய அரசு வழங்காது. இந்த பாதை தேக்கடி வனவிலங்கு சரணாலயத்தை கடந்து செல்கிறது. சரணாலயத்திற்குள் ரயில்வே வழித்தடம் அமைக்க முடியாது.

குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை டிரக்கிங் செல்ல வசதியாக பாதையை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த போகிறோம் என மக்களை ஏமாற்றவே இது பற்றி பா.ஜ அரசு  திரும்ப, திரும்ப கூறி வருகிறது. சாத்தியம் இல்லாத விஷயங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து லோயர்கேம்ப் வரை மதிப்பீடு தயாரித்தபடி ரயில்பாதையை அமைத்து முதல் கட்ட பணிகளை முடியுங்கள் என நாங்கள் தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, மத்திய அரசின் உத்தரவை எங்களால் மீற முடியாது என கை விரிக்கின்றனர்.

Tags : government ,protest group ,sabarimalai ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...