திம்மரசநாயக்கனூர் அருகே சாலையில் பெருக்கெடுத்து வீணாக ஓடிய கூட்டுக்குடிநீர்

ஆண்டிபட்டி, ஜூன் 25:  குடிநீர் வடிகால் வாரியத்தினரின் அலட்சியப் போக்கால் ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் பல ஆயிரம் மீட்டர் வீணாக வழிந்து சாலையில் ஓடுவதை கண்ட பொதுமக்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 30 கிராம ஊராட்சிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையினை கொண்டுள்ளது. மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டில்  வைகை அணைப்பகுதியில்  மிகப் பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் உந்து நிலையம் அமைத்தனர். பின்னர் வைகை அணை பகுதியிலிருந்து ஆண்டிபட்டி கணவாய் வழியாக உசிலம்பட்டி உள்ளிட்ட 536 கிராமங்கள் பயன் பெறும் வகையில் பல கிலோ மீட்டர்  தூரத்திற்கு ராட்சத குழாய்களை பூமிக்கடியில் பதித்து, பல நீர் உந்து நிலையங்கள் அமைத்து ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினர்.

மேலும் இத்திட்டத்தின் மூலமாக பெரியகுளம் யூனியன், குள்ளப்புரம், எ.வாடிபட்டி, டி.வாடிபட்டி, லட்சுமிபுரம், டி.வி.ரெங்கநாதபுரம், ஜெ.ஜெ.நகர், ஆண்டிபட்டி யூனியன், டி.சுப்புலாபுரம் ஊராட்சி, புள்ளிமான்கோம்பை ஊராட்சி,உசிலம்பட்டி யூனியன், சேடபட்டி யூனியன், பேரையூர், கல்லுபட்டி, எழுமலை உள்ளிட்ட கிராம மக்களுக்கு சுமார் 7 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 24 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்திலிருந்து நேற்று சுத்தம் செய்வதற்காக குடிநீரை திறந்து விட்டனர். இதனால் பலாயிரம் லிட்டர் குடிநீர் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீணாக வழிந்து ஓடியது.

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் சென்ற பொதுமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கண்டு மன வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு பொது மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரின் அலட்சியப் போக்கால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்பட்டுள்ளளது.  ஆண்டிபட்டி பகுதியில் பல  கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் குடிநீரை வீணாக்காமல்  மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சேமித்து மறுபடியும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : Thimarasanayakanur ,road ,
× RELATED காரியாபட்டி அருகே வாறுகால் அடைப்பால்...