×

உத்தமபாளையத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடா பால் வாங்க வந்தவர்களுக்கு இலவச சில்வர் தூக்கு வாளி

உத்தமபாளையம், ஜூன் 25:  உத்தமபாளையத்தில் பால்பண்ணைகளில் பிளாஸ்டிக் மூலமாக பால் தருவதை தவிர்த்து இலவசமாக சில்வர் வாளி வழங்கி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பேரூராட்சி சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தினந்தோறும் பிளாஸ்டிக் ரெய்டு நடந்து வருகிறது. இதேபோல் உணவில் கலப்படத்தை தடுத்திட தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்களுக்கு பண்ணைகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் பால் பிளாஸ்டிக் பாக்கெட்கள் மற்றும் பிளாஸ்டிக் கேரிபேக் மூலம் தருவதை தடுத்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி மாவட்ட உணவு நியமன அலுவலர் (பொ) நடராஜன் அறிவுறுத்தலின்படி உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சில்வர் தூக்கு வாளியில் பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கை நலஆர்வலர் அன்சாரி தனது பண்ணையில் வாளிகளை வழங்கினார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ கூறுகையில், `` உத்தமபாளையம் வட்டார அளவில் கலப்பட பொருட்கள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி சுகாதாரத்துறையினருடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான உணவினை மக்கள் பயன்படுத்துதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

Tags : Silver ,Uthamapalayam ,Plastic Plaza ,
× RELATED தஞ்சாவூரில் நகை வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி கொள்ளை