×

வறண்டது சுருளி அருவி சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

கம்பம், ஜூன் 25:  சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால், அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் சிறப்பு மிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இங்கு சுருளிமலை ஐயப்பசாமி கோயில், பூதநாராயணன் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில், சுருளி வேலப்பர் கோயில் மற்றும் கைலாய நாதர் குகையும் உள்ளன. சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும். இங்கு சித்திரை, தை பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும். கடந்த சில மாதங்களாக மழை இல்லாததாலும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் குறைந்ததாலும் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து கடந்த ஒரு மாதமாக முற்றிலும் நின்று போனது. இதனால் ஆண்டு தோறும் தண்ணீர் விழும் சுருளி அருவி தற்போது வரண்டு கிடக்கிறது. இந்நிலையில் சுருளி அருவி நுழைவுப்பகுதியில் உள்ள கேட்டில் வனத்துறை சார்பில் ``தற்போது சுருளி அருவிக்கு நீர்வரத்து இல்லை’’ என எழுதப்பட்ட பேனர்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது