×

கடும் வெப்பம் அதிகரிப்பு; அடுத்தடுத்த மாதங்களில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பு.... ஆலை உரிமையாளர்கள் தகவல்

காரைக்குடி, ஜூன் 25: விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைந்ததால் அடுத்தடுத்த மாதங்களில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல், பள்ளத்தூர் ஆகிய ஊர்கள் தமிழகத்தின் அரிசி உற்பத்தியில் மிகமுக்கிய ஊர்களாக திகழ்கின்றன. இந்த இரண்டு ஊர்களில் மட்டும் 200க்கும் மேற்ப்பட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. தமிழகத்தின் சென்னை, கோவை, பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், ஊட்டி, கேரளா போன்ற பெரும்பாலான வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து தான் அரிசி செல்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் வடகிழக்கு பருவ மழையும், தென்மேற்கு பருவ மழையும் பெய்யவில்லை.

இதுவரை குருவைக்கு காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீர் போதிய இருப்பு இல்லாததால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. தமிழக டெல்ட்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் புதுவயல் மற்றும் பள்ளத்தூர் பகுதிகளுக்கு வரும் நெல்லின் வரத்து சென்ற ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது. பெரும்பாலும் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அரியலூர், மதுரை திருவாடானை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் போன்ற ஊர்களில் இருந்து தான் நெல் வரத்து இருக்கும். இந்த ஆண்டு ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் வருகிறது.

கடந்த வருடம் வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. இனி வரும் மாதங்களில் டெல்ட்டா விவசாயிகள் பழைய நிலைமைக்கு வந்தபிறகு தான் நெல் அறுவடை குறித்து தெரியவரும். கடந்த ஆண்டு 62 கிலோ எடை கொண்ட டீலக்ஸ் பொன்னி புது ரகநெல் ரூபாய் 1400க்கு கொள்முதல் செய்யபட்டது. இந்தாண்டு புது நெல், தற்போது மூடை 1600 வரைக்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. பழைய ரக டீலக்ஸ் பொன்னி கடந்த ஆண்டு மூடை ஒன்று 1500க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 1750க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும் தினமும் 300 முதல் 400 லாரிகள் வரை வரும் நெல் வரத்து இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 லாரிகள் வரை மட்டுமே வரத்து உள்ளது. இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சென்ற ஆண்டு இதே  மாதத்தில் டீலக்ஸ் பொன்னி கிலோ 45க்கு (புதியரகம்) விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது கிலோ 50க்கும் (உள்ளூர் மில் விலை) விற்பனை ஆகிறது. 100 கிலோ கொண்ட மூட்டை 4600 முதல் 4800 வரை விற்பனை செய்யபடுகிறது. இந்த விலை மேலும் அடுத்தடுத்த மாதங்களில் வரத்துக்கு தகுந்தாற்போல் மாறும் என்பதால் விலை உயர வாய்ப்புண்டு. கடந்த ஆண்டு பகலில் மட்டுமே இயங்கி வந்த அரிசி ஆலைகள் தற்போதும் அதேபோல் இயங்குகிறது. இந்தாண்டு குருவை சாகுபடிக்கு காவிரியில் நீர் சரியான நேரத்தில் திறக்கப்படாமல் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களானா திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் குருவை சாகுபடியும் இந்தாண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும், நெல் வரத்து அதிகமானால் அரிசி விலை குறையும். இதுவரை அரிசியின் விலை சற்று ஏறுமுகமாக  இருந்தாலும் நெல் வரத்து அதிகமானால் அரிசி விலை மட்டுமே குறையும். தற்போது பாதி ஆலைகள் சரிவர இயங்காமல் உள்ளதால் தற்போது பெரிய மாற்றம் இல்லை. மேலும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் விலைச்சல் அதிகம் உள்ளதால் அரிசி வியாபாரிகள் அம்மாநில அரிசிகளையே விலை அதிகம் கொடுத்து வாங்குவதாலும் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார். அடுத்தடுத்த மாதங்களில் நெல் வரத்துக்கு தகுந்தாற்போல் விலையில் மாற்றம் இருக்கும்’’ என்றார்.

Tags : Rice ,Plant owners ,
× RELATED நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில்...