×

இளையான்குடியில் ஊராட்சி அலுவலகத்தை மீண்டும் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு

இளையான்குடி, ஜுன் 25: நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்காத இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மீண்டும் ஜப்தி செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் அருகே வலசைக்காடு ராமசாமி மகன் மாரிமுத்து(48) என்பவர், சாலைக்கிராமம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டராக கடந்த 2008ல் வேலைக்கு சேர்ந்து, 2011 வரை ஊதியம் வாங்கியுள்ளார். அதற்குப் பிறகு 2012லிருந்து மாரிமுத்துக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால் மதுரை தொழிலாளர் நலத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாரிமுத்துவிற்கு சேரவேண்டிய 2012, 2013, 2014 ஆண்டிற்குறிய ஊதியம் ஒரு லட்சத்து என்பத்து மூன்றாயிரத்தை (1,83,000) வழங்குமாறும், தவறும் பட்சத்தில், அதே மதிப்பில் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த மார்ச் 26ம் தேதி மாரிமுத்து நீதிமன்ற அலுவலக ஊழியர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அலுவலக கதவினை உள்பக்கமாக பூட்டிவிட்டு அலுவலக பொருட்களை எடுக்க முயன்றார். ஆனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொருட்களை எடுக்கவிடவில்லை. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்த மாரிமுத்து, போலீசார் அனுமதியுடன் கோர்ட் மூலம் மீண்டும் பூட்டை உடைத்து ஜப்தி நடவடிக்கை எடுக்க கோர்ட் மூலம் உத்தரவு வாங்கி வருவேன் என திரும்பிச் சென்றார்.

மூன்று மாதத்திற்கு பிறகு நேற்று காலை மாரிமுத்து இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தை மீண்டும் ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவுடன் காத்திருந்தார். ஆனால் இளையான்குடி போலீசாரும், கோர்ட் அலுவலர்களின் முறையான ஒத்துழைப்பு இல்லாததால், ஏமாற்றத்துடன் மாரிமுத்து திரும்பிச் சென்றார். இதுகுறித்து மாரிமுத்து கூறியதாவது, ‘நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்துள்ளேன். ஆனால் போலீசாரும், கோர்ட் ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லை. இது கோர்ட் அவமதிப்பு செயல்’ என்றார்.

Tags : panchayat office ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...