×

பள்ளிகளில் குற்றங்களை தடுக்க புகார் பெட்டி அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

இளையான்குடி, ஜுன் 25:  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க, புகார் பெட்டி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு சில பள்ளிகளில் சமீப காலமாக, மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட, பள்ளிகளில் படிக்கும் நேரமே அதிகம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருசில  ஆசிரியர்களால் இழிநிலையுடன், ஆபத்தும் ஏற்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு சாரா அமைப்பினால் என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஒரு சில நேரங்களில் பெண் குழந்தைகளுக்கு தங்கள் கூடவே இருக்கும் இடத்திலும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் தரப்பில் பல எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பரீட்சை, பாஸ், மார்க், பயம் என படிக்கும் மாணவிகள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகிவருவதாக புகார்கள் குவிந்து வருகிறது. மாணவிகளுக்குத்தான் இந்த அவலம் என்றால் மாணவர்களுக்கும், சில பள்ளிகளில் வாய்விட்டுச் சொல்லமுடியாத கஷ்டம் ஏற்பட்டுத்தான் உள்ளது. மாணவர்களை தேவையில்லாமல் அலைக்கழிப்பது. தண்ணீர், சாப்பாடு, டீ, வாங்கி வரச்சொல்லுவது, கட்டிட வேலை, விட்டு வேலை வாங்குவது. இப்படி மாணவர்களை பாடாய்படுத்தும் நிலையும் சில பள்ளிகளில் தொடர்கதையாக நீடிக்கிறது. அதனால் இளையான்குடி பகுதி உட்பட மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் எனவும்,

அதனை வாரம்தோறும் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், அப்பகுதி போலீஸ் அதிகாரி, பெண் ஆசிரியர், ஆகியோர் முன் புகார்களை படித்து விசாரிக்க வேண்டும். குற்றம் எனில் சம்பந்தப்பட்டவரை விசாரணை செய்ய ஆவணம் செய்ய வலியுறுத்த வேண்டும். அதற்கு அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். துகுறித்து சமூக ஆர்வலர் சேதுஜெகதீஸ் கூறியதாவது, ‘‘பள்ளிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள், புகார்களை தடுக்க புகார் பெட்டி அமைக்க வேண்டும். அதனை நான்குபேர் கொண்ட குழு விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையால் பள்ளிகளில் பலவிதமான புகார்கள், குற்றங்கள் குறையும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : activists ,schools ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...