குடிதண்ணீர் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம், ஜூன் 25:  நல்லிருக்கை கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியம் நல்லிருக்கை கிராம பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர். பின்னர் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில், நல்லிருக்கை பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 வருடங்களாக எந்த நிதியும் நல்லிருக்கை பஞ்சாயத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. கிராமத்தில் அன்றாட அத்தியாவசிய தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. முக்கிய தேவையான குடிநீர் கடந்த 3 ஆண்டுகளாக வழங்க வில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வருவதில்லை.

இது சம்பந்தமாக நாங்கள் பலமுறை ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தில் குடிநீர் தேவைக்காக உள்ள கிணறு பராமரிப்பு இன்றி தூர்வாராமல் பயனற்ற நிலையில் உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றின் மேலே உரை வைக்க  நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் எங்களது செயல்படாத ஊராட்சி செயலாளர் தான். செயல்படாத செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து கிராமத்தின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்’’ என மனுவில் கூறியுள்ளனர்.

கிராம பெண்கள் கூறுகையில், 550ம் குடும்பங்கள் உள்ள கிராமத்தில் குடிநீருக்காக தினமும் அலைகிறோம். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அருகில் உள்ள மற்ற ஊர்களில் தண்ணீர் வருவதாக கூறுகின்றனர். எங்கள் ஊரில் தண்ணீர் வருவதில்லை. லாரிகளில் வாரம் ஒரு முறை வரும் குடிநீர் குடம் ரூ.6 முதல் 10 வரை வாங்க வேண்டியுள்ளது. குடிநீருக்காக தோண்டப்பட்ட கிணறும் தூர்வாரவில்லை. ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் பணம் இல்லை. மக்களின் நலன் கருதி குடிநீருக்கு கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags : Siege ,collector ,
× RELATED CAA-க்கு எதிராக திருப்பத்தூர் மாவட்ட...