×

நிலத்தடி நீரை விற்பனைக்கு எடுக்க எதிர்ப்பு கலெக்டரிடம் கிராமத்தினர் புகார்

ராமநாதபுரம், ஜூன் 25:  ராமநாதபுரம் அருகே நொச்சியூரணி, சாத்தக்கோன்வலசை, பிரப்பன்வலசை கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ‘‘எங்கள் ஊராட்சிகளில் தனியார் நிலத்தடி நீர் எடுத்து வியாபார நோக்கில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிநபர்கள் வியாபார நோக்கில் ஆள்துளை கிணறு அமைத்து தினந்தோறும் இரவு, பகலாக நூற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். ஐஸ் பிளான்ட், மற்றும் கட்டுமான பணிகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக உள்ள குடிநீர் கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் குறைந்து விட்டது. முறையாக வழங்கப்படுவதும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் மற்ற கிராமங்களைப் போல் நாங்களும் குடங்களை தூக்கிக்கொண்டு நடு வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்.

எங்கள் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை செடி உற்பத்தி செய்து வருகிறோம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் உள்ளன. மேலும் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் சுந்தரமடையான் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் பழப்பண்ணை உள்ளது. பண்ணையில் உற்பத்தி செய்யும் ஒட்டுக் கன்றுகள் நமது மாவட்டம், தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் கடல் நீர் புகுந்து அப்பகுதி முழுவதும் உப்பு நீராக மாறி வருகிறது.

தண்ணீர் கொண்டு செல்வதை நிறுத்தாவிட்டால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அதனால் கலெக்டர், பொதுமக்களின் நலன் கருதி தண்ணீரை சுரண்டி விற்பனை செய்கின்ற தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளிப்பகுதிக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென  பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனு அளித்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...