×

ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் கழிப்பறையின்றி பக்தர்கள் அவதி

திருவாடானை, ஜூன் 25:   திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரெத்தினேசுவரர் சமேத சிநேகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் பாண்டி தலங்கள் 14ல் எட்டாவது தலமாகும். இக்கோயில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் கோயிலில் மாதாந்திர பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு உரிய கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் என தேவஸ்தானம் மற்றும் ஊராட்சிக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர் பக்தர்கள். பக்தர்கள் கூறுகையில், இக்கோயில் முக்கிய தலமாக இருப்பதால் சுற்று கிராம பொதுமக்கள் தங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளை இக்கோவிலில் நடத்துகின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பெருமளவு திருமணங்கள் இங்கே நடைபெறுகிறது.

இது மட்டுமல்லாமல் வெளியூர் சுற்றுலா பயணிகளும் இங்கே வருகின்றனர். இவ்வளவு முக்கிய தலத்தில் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை வசதியை செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Devotees ,
× RELATED கொரோனா ஊரடங்கால் 2 மாதத்தில்...