×

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் இடமாறுதல் ஜூலை 8ல் துவக்கம்

ராமநாதபுரம், ஜூன் 25:  ராமநாதபுரம் மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்குவதை முன்னிட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராமநாதபுரத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதி வரை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெறப்படவுள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தும் எமிஸ் எண்ணில் ஏற்றப்பட்டு, அதற்கான ஒப்புதலும் ஆசிரியர்களிடம் பெறப்படவுள்ளது. விண்ணப்ப அடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் வரும் ஜூன் 8ம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறுகின்றன.

ஜூலை 9ம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வும் நடக்கிறது. ஜூலை 10ம் தேதி ஒன்றியம் மற்றும் வருவாய் மாவட்டத்துத்துக்குள்ளான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வானது நடைபெறுகின்றன. ஜூலை 11ம் தேதி  ஒன்றியத்துக்குள்ளே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. ஜூலை 12ம் தேதி மாலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 13ம் தேதி  இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்கு உள்பட்ட பணிநிரவல் கலந்தாய்வு மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள்ளான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகின்றன.

ஜூலை 14ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வும்,  வருவாய் மாவட்டத்துக்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படவுள்ளன. ஜூலை 15ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், மாலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பொதுமாறுதல் கலந்தாய்வும் நடைபெறவுள்ளன. உயர், மேல்நிலை பள்ளி கலந்தாய்வு நகராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டத்துக்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டத்துக்குள், வருவாய் மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் விட்டு மாவட்டத்துக் குள்ளான கலந்தாய்வுகள் வரும் ஜூலை 8ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
 
அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான கலந்தாய்வும், அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் ஜூலை 9ம் தேதி  காலை, மாலை நடைபெறுகிறது. அரசு, நகராட்சிப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் ஜூலை 10ம் தேதி அப்பள்ளிகளின் முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான கல்வி, வருவாய் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெறுகின்றன. அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஜூலை 11 ம் தேதி நடைபெறுகிறது. அப்பள்ளிகளின் உடற்கல்வி, கலை ஆசிரியர்கள், இசையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வுகள் ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. பட்டதாரி பணி நிரவல் கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி பகலிலும், சிறுபான்மை மொழிப்பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது என கல்வித்துறை  தெரிவித்தது.

Tags : Teachers Relocation ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...