×

முதுகுளத்தூர் பகுதியில் வீணாகி வரும் காவிரி குடிநீர்

சாயல்குடி, ஜூன் 25:  முதுகுளத்தூர் பகுதியில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்து வருவதால், தண்ணீர் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கு இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே நீரேற்றும் அறைகள் அமைக்கப்பட்டு, கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளில் சேமிக்கப்படும் தண்ணீர், பிளாஸ்டிக் குழாய்கள் மூலமாக கிராமங்களுக்கு பிரித்து, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சாலையோரம் தோண்டப்படும் குழிகள், தண்ணீர் திருட்டுக்காக சேதப்படுத்துதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்நிலையில் பரமக்குடி, முதுகுளத்தூர் சாலையிலுள்ள புதிய தீயணைப்பு நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் ஏர் வால்வு சேதமடைந்து கிடக்கிறது. அக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறி பல லட்சம் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

மேலும் ஏர்வால்வு தொட்டில் சிலர் சோப்பு போட்டு குளித்தல், துணிகளை துவைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. குழாய் உடைப்பு வழியாக சுகாதாரமற்ற தண்ணீர் செல்லும் வாய்ப்பு உள்ளதால், அதனை குடிக்கும் மக்களுக்கு நோய் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த ஏர்வால்வு குழாய் மற்றும் தொட்டியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery ,area ,Mudukulathur ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது