×

130 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை பாலத்திற்கு பாஜ நிறம்: மேலிட உத்தரவு காரணமா?

மதுரை, ஜூன் 25: வைகை ஆற்றில் 130 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஏ.வி.மேம்பாலத்தில் பாஜ கொடி வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வைகை ஆற்றின் குறுக்கே முதன்முதலில் மதுரை நகரின் வட பகுதி தென்பகுதியை இணைக்க 1889ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கோரிப்பாளையத்திற்கும் நெல்பேட்டைக்கும் இடையே மேம்பாலம் கட்டப்பட்டது. இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் பெயரால் ஏ.வி.மேம்பாலம் என தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறது. 300 மீட்டர் நீளமுடைய இந்த பாலத்தில் 14 ஆர்ச் வளைவுகள் அமைந்துள்ளன. 2000வது ஆண்டு இதன் அருகிலேயே கல்பாலத்தின் மேல் யானைக்கல் செல்லூர் இடையே மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் பிறகு ஏவி மேம்பாலம் பலப்படுத்தப்பட்டு, ஒரு வழிப் பாதையாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலத்தின் வயது 130 ஆகியுள்ள நிலையில் அதன் மேல் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

ஆனாலும் பாலம் பலப்படுத்தப்பட்டு மதுரை நகரின் பழமையின் சின்னமாக, பாரம்பரிய அடையாளமாக மலைபோல் நிலை குலையாமல் நிற்கிறது.
பாலத்திற்கு மெருகூட்டுவதற்காக குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் வண்ணங்கள் தீட்டுவது உண்டு. இதில் பெரும்பாலும் மஞ்சள், வெள்ளை, சிமெண்ட் கலர், பச்சை போன்ற வண்ணம் மாறி மாறி இடம்பெற்று வந்தது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த பாலத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் தற்போது காவி வண்ணம் தீட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இடைஇடையே பச்சை வண்ணமும் தீட்டப்படுகிறது. இதை பார்ப்பதற்கு காவி, பச்சை உள்ள பாஜ கொடியை பிரதிபலிப்பதைபோல் உள்ளது.

வைகை ஆற்றில் மதுரை நகர் பகுதியில் 11 மேம்பாலங்கள் உள்ளன. எதிலும் இல்லாத நிறமாக திடீரென்று பழமையான ஏ.வி.மேம்பாலத்தில் பாஜ வண்ணம் திணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர், மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் பரவி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு “130 ஆண்டு சிறப்பு வாய்ந்த மேம்பாலத்திற்கு காவி வண்ணம் பூசுவதற்கு இங்குள்ள அதிகாரிகள் யாரும் விரும்பி முடிவு செய்யவில்லை. மேலிட அழுத்தம் காரணமாக அந்த காவி வண்ணம் தீட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்களால் எதுவும் இல்லை” என்று கைவிரித்தார்.

திமுக எம்எல்ஏ எதிர்ப்பு
 மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரையின் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டான பழமை வாய்ந்த ஏவி மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  ரூ.10 லட்சத்தில் புதிய வண்ணம் பூசி வருகிறது. முழுவதுமாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து நடைபெறும் இந்த பணியில் ஒரு அரசியல் கட்சியின் சாயலில் வண்ணம் பூசப்படுவது ஏற்புடையதல்ல. எனவே அரசியல் சார்பின்றி, இந்த பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Baja ,bridge ,
× RELATED நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக...