சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில் இருந்த ராட்சத தேன்கூடு இரவோடு இரவாக அகற்றம்

சோழவந்தான், ஜூன் 25: சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய ராட்சத தேன் கூட்டை தினகரன் செய்தி எதிரொலியால் தீயணைப்பு துறையினர் அகற்றினர். சோழவந்தான் ரயில்வே கேட் வடக்கு பகுதியில் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் சில மாதங்களாக ராட்சத தேனீக்கள் பெரிய தேன்கூடு கட்டி இருந்தன. ரயில் செல்லும் போது அதிர்வினால் தேனீக்கள் கலைந்து, ரயில்வே கேட்டில் காத்திருக்கும் பயணிகளை விரட்டிக் கொட்டியது. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
இதையடுத்து சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம்,

போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து மற்றும் பணியாளர்கள் தேன்கூட்டை அகற்ற முன் வந்தனர். இருப்பினும் தேன்கூடு இருக்கும் பகுதியில் ரயில் இயங்குதலுக்குரிய உயர் அழுத்த மின் வயர்கள் செல்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களிடம் ஆலோசித்த தீயணைப்பு துறையினர் ரயில் போக்குவரத்து இல்லாத நீண்ட இடைவெளி நேரம் மற்றும் பயணிகள் நடமாட்டம் இல்லாத இரவில் அகற்ற முடிவெடுத்தனர். இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு தேன்கூட்டை தீயணைப்பு துறையினர் பாதுகாப்புடன் அகற்றினர். ரயில்வே கேட் பகுதியில் தேனீக்களுக்கு பயந்து அச்சத்துடன் சென்று வந்த பொதுமக்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Cholavandan Railway Gate ,
× RELATED சோழவந்தான் ரயில்வே கேட்டில் ராட்சத தேனீக்கள்