×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிக்க முன்பதிவு துவங்கியது

மதுரை, ஜூன் 25: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு நேற்று துவங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், மதுரை ரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்தில், பயணிகள் நீண்ட வரிசையில் நின்று தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இவர்கள் படுக்ைக வசதி மற்றும் இருக்கை வசதியுடன் செல்லவேண்டும் என்பதற்காக முன்பதிவு செய்து, தங்களது இருக்கையை உறுதி செய்துகொள்வர். இந்த முன்பதிவு செய்வதற்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு மையங்கள் உள்ளன. 120 நாட்கள் அதாவது நான்கு மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பெல்லாம், ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடப்பர். பல மணிநேரம் காத்துக்கிடந்து, முன்பதிவின் போது, டிக்கெட் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.

ஆனால் தற்போது வீடு, அலுவலகத்தில் இருந்தபடி ஆன்லைனிலும், என்று பயணம் செய்கிறோமோ அன்று காலை தட்கல் முறையிலும் டிக்கெட் பெறும் திட்டங்கள் வந்தபின், பதிவு என்பது அனைவருக்கும் எளிதான வேலையாகிவிட்டது. நேரில் வந்து இந்த முன்பதிவு செய்ய ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் முன்பதிவு மையங்கள் உள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் இந்த முன் பதிவு மையங்கள் உள்ளன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படும். தற்போது தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நேற்று முன்பதிவு துவங்கியது.

மதுரை ரயில் நிலையத்தில் நேற்று காலை 5 மணியிலிருந்தே பயணிகள் வரிசையில் நின்று முன்பதிவு செய்தனர். மதுரையை பொறுத்தவரை, தீபாவளி அன்றும், அதற்கடுத்த நாளும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த வருடம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மதுரையிலிருந்து, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்றே அதிகளவில் இருக்கும். குறிப்பாக, சென்னை செல்வோரின் எண்ணிக்கையே அதிமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, பாண்டியன், நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த 3 ரயில்களிலும் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாகும். ஆன்லைனிலேயே அனைத்து முன்பதிவு டிக்கெட்களும் விற்பனை ஆகிவிடும் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் பதிவு செய்யப்படுவதால், சில மணி நேரங்களில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்தது.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...