வத்தலக்குண்டு அருகே டீக்கடைக்குள் புகுந்தது லாரி பெண் உள்பட 3 பேர் படுகாயம்

வத்தலக்குண்டு, ஜூன் 25: வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டி நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பால் வேன் சென்று கொண்டிருந்தது. அதன் பின்புறம் ஒரு லாரியும், ஒரு தனியார் பஸ்சும் அடுத்தடுத்து வந்தன. விருவீடு வந்த போது அங்குள்ள வேகத்தடையில் லாரி ஏறியது. அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோத, லாரி முன்னால் சென்ற பால் வேன் மீது மோதியது. இதில் பால் வேன் சாலையின் இடது பறம் ஒதுங்கி நின்றது. மோதிய வேகத்தில் லாரி அங்கிருந்த ராஜேந்திரன் என்பவரின் டீக்கடைக்குள் புகுந்தது. அப்போது லாரி மோதியதில் கடையில் நின்ற விருவீடு காசம்மாள், செக்காபட்டி தங்கவேலு, சென்மார்பட்டி ராமராஜ் ஆகியோர் படுகாயமைடைந்தனர். கடை முன்பு நின்ற டூவீலர் ஒன்று நசுங்கி போனது. மேலும் வடை கடையில் இருந்த சிலிண்டர் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டது.

இதனால் சிலிண்டர் வெடித்து விடுமோ என அங்கு கூடியவர்கள் அஞ்சினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்ததும் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமரன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் வந்து போக்குவரத்தை சீர்செய்தனர். வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக மீட்டனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வத்தலக்குண்டு- உசிலம்பட்டி சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பும், தனியார் பஸ்களின் அதிவேகமே விபத்திற்கு காரணமென பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags : persons ,teak shop ,lorry girl ,Wattalakundu ,
× RELATED மணல் கடத்திய 3 பேர் கைது