×

செங்குறிச்சி கூட்டுறவு வங்கி மோசடி விசாரணை கோணம் வேறுபக்கம் திரும்பியது

திண்டுக்கல், ஜூன் 25: சாணார்பட்டி அருகே செங்குறிச்சி கூட்டுறவு வங்கி மோசடி குறித்த விசாரணை முறைகேடு செய்தவர்களை காப்பாற்றும் நோக்கி நடந்து வருவதாக வங்கியின் துணை தலைவர் கலெக்டரிடம் புகார் அளித்தார். சாணார்பட்டி அருகே செங்குறிச்சியை சேர்ந்தவர் நல்லுச்சாமி. இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் வினய்யிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘நான் செங்குறிச்சி தொடக்க விவசாய கூட்டுறவு வங்கியில் துணை தலைவராக உள்ளேன். இந்த வங்கியில் போலி பட்டாக்களை தயாரித்து கடன் வாங்கியுள்ளனர். மேலும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு போலியாக கையெழுத்திட்டு ரூ. பல லட்சம் கடன் வழங்கியுள்ளனர். இவ்வாறு பணமோசடி, ஆள்மாறாட்டம், அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர், துணைப்பதிவாளரிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன்.

இதனடிப்படையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கூட்டுறவு சங்க விதி 81ன் படி விசாரணைக்கு ஆணையிட்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அதிகாரியாக பிச்சைவேல் என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில் விசாரணை அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் செய்தவர்களை காப்பாற்றும் நோக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசாரணை கோணம் வேறு பக்கம் திரும்பியுள்ளது. மோசடி செய்தவர்கள் தப்பிப்பதற்கு இந்த விசாரணை துணை போவதுபோல் உள்ளது. இதனால் கலெக்டர் தலையிட்டு ரூ.1 கோடி மோசடி சம்பந்தமான விசாரணையை கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் மக்களின் பணம் திரும்ப கிடைப்பது மட்டுமல்லாமல், நியாயமான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags : investigation ,Sengurichi Co-operative Bank ,
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்